அமெரிக்க பங்குச்சந்தைகளில் இவ்வாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இரண்டு நிகழ்ந்துள்ளன.
அதில் ஒன்றுதான் கூகுள் நிறுவனமானது அமெரிக்காவின் அதிகபெறுமதி வாய்ந்த நிறுவனங்களின் பட்டியலில் 5 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் அதன் பங்குகளின் விலை உயர்ந்தமையாகும்.
மற்றையது அப்பிளின் பங்குகள் வீழ்ச்சியடைந்தமையாகும். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் அப்பிளின் ஐபோன் 5 வெளியாகிய சில தினங்களிலேயே 5 மில்லியனுக்கும் அதிகம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக அறிவிப்பு வந்தபோதிலும் பங்கு விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
அப்பிள்
ஐ போன் வெளியாகிய பின்னர் பங்குச் சந்தையில் அப்பிள் வீழ்ச்சியடையவே இல்லையெனவும் ஆனால் வழமைக்கு மாறாக இம்முறை அவ்வாறு நிகழ்ந்துள்ளதாகவும் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நேற்றைய தின ஆரம்பத்தில் அப்பிளின் பங்குகளானது 2% வீழ்ச்சியடைந்ததுடன் நாளின் முடிவில் அவ்வீழ்ச்சியானது சற்றுக் குறைந்து 1.3 % ஆகக் காணப்பட்டது.
ஆனால் இன்று அதன் பங்குகள் 2.5% வீழ்ச்சியடைந்துள்ளதுடன் அதன் பங்கொன்றின் விலை சுமார் 673.54 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
அப்பிளின் இவ்வீழ்ச்சிக்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும் எதிர்வரும் சில தினங்களில் அதன் பங்கொன்றின் விலையானது 700 அமெரிக்க டொலர்களாக மாற்றமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் ஸ்டீவ் ஜொப்ஸின் காலப்பகுதியில் அப்பிள் இவ்வாறான ஒரு தளம்பல் நிலைக்கு உள்ளாகவில்லையென சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பிளின் ஐபோன் 5 வெளியாகிய சில தினங்களிலேயே 5 மில்லியனுக்கும் அதிகம் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ள போதிலும் இவ் எண்ணிக்கையானது எதிர்பார்க்கப்பட்டதனை விடக்குறைவாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிள் ஐபோன் 5 ஆனது முதல் ஒரு வாரத்துக்குள் 8 முதல் 10 மில்லியன் சாதனங்கள் விற்பனையாகுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 5 மில்லியன் சாதனங்களையே அப்பிளால் விற்க முடிந்துள்ளது.
நாம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐபோன் 5 தொடர்பாக வெளியிட்ட செய்தியில் ஐபோன் 5 அனைவரது எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்ததா? அல்லது 'அப்பிள் பேன் போய்ஸ்/ கேர்ள்ஸ்' ( Apple Fan boys/ Girls) எனப்படும் அதன் தீவிர விசிறிகளை மட்டுமே திருப்திப்படுத்தியதா எனக் கேள்வியெழுப்பியிருந்தோம்.
தற்போது சந்தை நிலையைப் பார்க்கும்போது நாம் முன்கூட்டியே தெரிவித்ததில் சற்று உண்மையுள்ளதாகவே தெரிகின்றது.
ஐபோன் 5 விற்பனையானது முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது. இது போன்ற காரணங்களே பங்குச் சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாகத் தெரிகின்றது.
எனினும் சந்தை மூலதனத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் அதி பெறுமதிவாய்ந்த நிறுவனங்களின் பட்டியலில் அப்பிள் தொடர்ந்தும் முதலிடத்திலேயே உள்ளது.
கூகுள்
கூகுளைப் பொறுத்தவரையில் அதன் பங்குகளின் விலை எதிர்பார்க்காத அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவின் அதிகபெறுமதி வாய்ந்த நிறுவனங்களின் பட்டியலில் 5 ஆவது இடத்துக்கு கூகுள் முன்னேறியுள்ளது.
ஜூன் மாதம் 14 ஆம் திகதி 559 அமெரிக்க டொலர்களாக இருந்த அதன் பங்கொன்றின் விலை நேற்று திடீரென 764.89 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தது. நேற்றைய நாள் முடிவில் அதன் பங்கொன்றின் விலை 749.38 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
இது கூகுளின் பங்கொன்று அடைந்த அதிகூடிய விலையாகும்.
இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு கூகுளின் பங்கொன்றின் விலை 747.24 அமெரிக்க டொலர்களாக உயர்ந்தமையே அதன் அதிகூடிய விலையாகக் காணப்பட்டது.
கடந்த 2009 ஆம் ஆண்டு கூகுளின் பங்கொன்றின் விலை 270 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி கண்டது. அக் காலப்பகுதியில் அமெரிக்காவில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் முதலீட்டாளர்கள் புதிய சமூக ஊடக நிறுவனங்களான பேஸ்புக், சிங்கா, மற்றும் குரூப்பொன் ஆகியன மீது ஆர்வம் செலுத்தத் தொடங்கியமையுமே இதற்கான காரணங்களாகும்.
ஆனால் தற்போது முதலீட்டாளர்கள் மீண்டும் கூகுளின் மீது ஆர்வம் செலுத்தத் தொடங்கியுள்ளதாகத் தெரிகின்றது.
கூகுளின் பங்குவிலையின் அதிகரிப்பானது 36% ஆகக் காணப்படுவதுடன் அதன் சந்தை மூலதனத்தினையும் 66.63 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
கூகுளின் தற்போதைய சந்தை மூலதனம் சுமார் 250 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இதன் பங்கொன்றின் விலையானது எதிர்வரும் 12 மாதகாலப்பகுதியில் 850 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2001 ஆம் ஆண்டு கூகுளின் வருவாய் 38 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது, விளம்பரங்கள் மூலமாக கூகுள் ஈட்டும் வருமானம் மிகவும் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
Thanks for Reading
connect us cautiously than you again